Saturday 15 January 2011

பொங்கலோ பொங்கல்!





பொங்கலோ பொங்கல் என்று
     போற்றிடும் தமிழர் தம்மின்
தித்திக்கும் திருநாள் இன்று
     தேன்தமிழ் வாழ்க! என்றும்

நானிலம் எங்கும் வாழும்
          நம்மக்கள் வாழ்க! என்றும்
உலகெலாம் ஒன்று பட்டு
               உய்ந்திட வேண்டும் என்றும்

பிறர்க்கென வாழும் மாந்தர்
                   பெருமையாய் வாழ்க! என்றும்
உழைப்பினைத் தந்தே இந்த
          உலகினை உயர்த்து கின்ற

உழைப்பாளர் வாழ்க! என்றும்
         உளமார வாழ்த்து கின்றேன்
பொங்கலோ பொங்கல் இந்தப்
     புத்தாண்டு வாழ்க! வாழ்க!

 


Sunday 21 November 2010

தீபத்திருநாள் வாழ்த்து


தீபத்திருநாள் நன்னாளில்                      
                             சிவசிவ எனவே வாழ்த்துகிறேன்!
அண்ணாமலையார் தீபம்போல்          
                             ஆருயிர் அனைத்தும் வாழியவே! 

Thursday 4 November 2010

ஆண்டவா! அருள்செய்வாயே!

தீபாவளித் திருநாளில்
சிவனே! உன்பாதம் போற்றி
வையக மாந்தர்க் காக
வரம்பல கேட்பேன் அப்பா!

எனக்காக ஏதும் வேண்டா 
எனக்குநீ தந்தி ருக்கும் 
வளமான  வாழ்வே போதும் 
வணங்கிஉய் வேன்எப் போதும்!

சண்டைசச் சரவு இன்றித் 
தாரணி தழைக்க வேண்டும்!
நீள்புவி மாந்தர்க் கெல்லாம் 
நிம்மதி நெஞ்சில் வேண்டும்!

குவலயம் தன்னை வாட்டும் 
கொலை கொள்ளை கற்பழிப்பு
தீவிர வாதம் மற்றும் 
தீண்டாமை ஒழிய வேண்டும்!

மனித நேயத்தி னாலே 
மானுடம் செழிக்க வேண்டும்!
புண்ணியா! இவற்றை யன்றிப்
புவிக்குவே றென்ன வேண்டும்!

அருட்பெருஞ் ஜோதி யான
ஐயனே! கேட்ட தெல்லாம்
அன்புடன் வையம் வாழ
ஆண்டவா! அருள் செய்வாயே!

Saturday 30 October 2010

முத்தமிழே! வாழிய நீ!

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஈன்றவளே! எங்கள் இனிய தமிழ்த் தாயே!


கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிக்
கன்னியென இன்னும் கச்சிதமாய் வாழ்பவளே!


பத்துப் பாட்டுத்  தொகையும் பாங்கான கீழ்க்கணக்கும்
காப்பியம் புராணங்கள் கணக்கின்றித் தந்தவளே!


திருவாசகம் தொட்டுத் தேவாரத் திருமுறைகள்
ஆழ்வார்கள் பாட்டெல்லாம் அற்புதமாய்த் தந்தவளே!

இப்பாலும் அப்பாலும் எப்பாலும் போற்றிடவே 
முப்பாலைத்  தந்தவளே! முத்தமிழே! வாழிய நீ!